சனி, 14 ஜனவரி, 2017

உழவர் திருநாளாம் தைத்திருநாள் - தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழர்களின் ஐதீகத்தின் படி தமிழர்கள் பண்பாட்டின் அடிப்படையில் வருடத்தின் முதல் மாதமான தை மாதத்தில் வரும் விசேட பண்டிகையான தைப்பொங்கல் தமிழுக்கு தை மாதத்தின் முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.இத் தைத் திருநாளானது மலேசியா,சிங்கப்பூர்,மொறிசியஸ்,ஐரோப்பிய நாடுகள் , இந்திய மற்றும் இலங்கை வாழ் தமிழ் மக்களால் விசேடமாக கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் பாரம்பரிய முறையின் படி தைப்பொங்கல் திருநாளானது விளைச்சலுக்கு முழுமுதற் கடவுளாக விளங்கும் சூரிய பகவானுக்கு வழிபாடு செய்யும் முகமாகவும் நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவும் கொண்டாடப்படுகிறது.ஆனால்...ஆரம்பகாலத்தில் குறிப்பாக பகைமையும் உயிரினங்களின் பசி நீங்கவும் அத்தோடு உழவர்களுக்கும் ,விவசாயத்திற்கும் அஸ்திவாரமாக விளங்கும் பசுக்களுக்கு நன்றி கூறும் முகமாகவும் கொண்டாடப்பட்டிருக்கின்றது.

நல்ல விளைச்சலை கொடுத்த பூமிக்கும் ,விளைச்சலுக்கு உதவிய கால்நடைகளுக்கும்,மழைக்கும் பயிர்ச் செழிப்புக்கும் உதவும் சூரிய பகவானுக்கும் சேர்த்தே நன்றி செலுத்தப்படுகின்றது.இந்த நாளில் ஆரம்ப காலந்தொட்டு காவல் தெய்வங்களுக்கும் சிவனுக்கும் கூட சிறப்பாக இத் தைப்பொங்கல் வழிபாடு செய்யப்பட்டது என்பது வழக்கம்.

இலக்கிய காலத்தில் இப் பொங்கலானது இந்திர விழாவாக கொண்டாடப்படிருகின்றது.காரணம்,இந்திரனை வழிபட்டால் நல்ல மழை பொழியும்.மும்மாரி பொழிந்தால் நல்ல பயிர்ச் செய்கை ஏற்படும் என்பது ஐதீகம்.காலப்போக்கில் சூரியனின் வெப்பக்கதிர்கள் மூலம் பூமியிலிருந்து நீர் ஆவியாகி மழை பொழியும் என்ற விளக்கம் மக்கள் மனதில் பதிந்த பின்னர்,சூரியனை வழிபட்டால் சிறப்பு எனும் அடிப்படையில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 



இதே வேளையில் எல்லோரும் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது என்பது மரபு.ஆனால்,ஆரம்ப காலத்தில் சந்திரனுக்குத்தான் தை மாதம் மட்டுமின்றி ஏனைய மாதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருகின்றது.சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்வு போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டே நாள்க்கணக்கு செய்யப்பட்டிருகின்றது.காலப்போக்கில் இது மாறி;சூரியனின் நகர்வை அடிப்படையாகக்கொண்டே கணிக்கப்பட்டிருகின்றது.

சங்க இலக்கியங்களில் இத் தைப்பொங்கலானது:-
1.நற்றிணையில் - தைத் திங்கள் தண்கயம் படியும் எனவும்
2.குறுந்தொகையில்-தைத் திங்கள் தண்ணிய தரினும் எனவும்
3.புறநானூறில்-தைத் திங்கள் தண்கயம் போல் எனவும்
4.ஐந்குருநூறில்-தைத் திங்கள் தண்கயம் போல எனவும்
5.கலித்தொகையில்-தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ எனவும்
கூறப்படுகின்றது.

இத்தைப்பொங்கல் தினத்தன்று ஒவ்வொரு தமிழர்களும் தங்கள் இல்லங்களில் தைப்பொங்கலை மிகவும் சிறப்பாகவும் ,தமிழ் பாரம்பரிய கலை கலாச்சார முறையிலும் கொண்டாடுவது வழக்கம்.இந்த நாளில் சுத்தமாக நீராடி ,வாசலில் மஞ்சள் தெளித்து ,கோலமிட்டு,மஞ்சள் தோரணங்கள் கட்டி ,வாசலில் கரும்பும் கட்டி,பின்னர் புதுப் பானையில் புது அரிசியில் பொங்கல் பொங்கி,பொங்கல் பொங்கி வழியும் போது "பொங்கலோ பொங்கல் " என்று கூறி அகமகிழ்ந்து சூரியனுக்கு படைத்து வழிபடலே இந்தப் பொங்கலின் சிறப்பம்சம்!

"அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் "


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக