வெள்ளி, 9 செப்டம்பர், 2011

குணச்சித்திர நடிகை காந்திமதி மரணம்

பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் (புற்று நோய் காரணமாக) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.

2000 ஆம் ஆண்டு இதய நோய் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதன் பின்னர் தேறினார்.

பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தொலைகாட்சி தொடர்களில் மாத்திரம் நடித்து வந்தார். காந்திமதி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.சென்னை வடபழனியில் வசித்து வந்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.

16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜாவின் படங்களில் தவறாமல் நடித்து வந்தார்.நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக நடித்து அசத்தியவர் காந்திமதி.

கரகாட்டக்காரன் படத்திலும் இவரது வேடம் வெகுவாகப் பேசப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது மகன் தீனதயாளன் அறிவித்துள்ளார்.


காந்திமதியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2 கருத்துகள்:

எஸ்.ஆர்.சேகர் சொன்னது…

மறைந்த காந்திமதி குடும்பத்திற்கும் அவரது ரசிகப்பெருமக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

nallavan சொன்னது…

மிக சிறந்த நடிகை. எனக்கு மிகவும் பிடிக்கும் இவரது நடிப்பும் உரையாடல் முறையும். தமிழ் திரையுலகம் ஒரு மிக சிறந்த நடிகையை இழந்து இருக்கிறது. காந்திமதி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல மனிதர்களின் மனங்களை வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துரையிடுக