வெள்ளி, 29 ஜூலை, 2011

தாயை போற்றும் வைரமுத்து

கடந்த 13 ஆம் திகதி பிறந்த நாளைக் கொண்டாடிய கவிப்பேரரசுக்காக எழுதும் பிந்திய பதிவு இது. தமிழ் உலகம் போற்றும் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவர் வைரமுத்து. அவரின் சமூகச் சூழல், வாழ்க்கை கோலம் என்பன சேர்ந்து ஒரு கவிஞனாக இவரை மாற்றிப்போட்டது. தனது 19வது வயதில் "வைகறை மேகங்கள்" ஊடாக கால் தடம் பதித்தார்.



தொடர்ந்து இவர் எழுதிய "திருத்தி எழுதிய தீர்ப்புகள்" இவரின் வாழ்க்கை பாதையையே திருப்பிப் போட்டது எனலாம். இந்த கவித்தொகுப்பு வைரமுத்துவை பாரதிராஜாவுக்கு அடையாளம் காட்டி நின்றது. பாரதிராஜா 1980ல் தயாரித்த நிழல்கள் திரைப்படத்தில் கன்னிப்பாடல் எழுதினார் வைரமுத்து. அன்று எழுத ஆரம்பித்த இவரது பேனா இன்று 60,000 பாடல்களை கடந்தும் எழுதிக்கொண்டே இருக்கின்றது.


இப்படி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.. ஆனால் நான் இப்பதிவினூடாக அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்ல வரவில்லை. மாறாக அவர் தாயை போற்றும் தலைசிறந்த தமிழ் மகன். அப்படிப்பட்ட வைரமுத்து எப்படியெல்லாம் தான் தாயை போற்றுகின்றார் என்றே சொல்லப்போகின்றேன்.
தன் குழந்தை வைரமா..?? இல்லை முத்தா..?? என்று ஒரு குழப்பம்... அதுதான் இறுதியில் வைரமுத்து என்று வைத்துவிட்டார் போலும்.

உண்மையில் ஆயிரம் கவி சொன்னேனே என்ற கவிதையை கேட்கும் போது அவர் தன் தாய் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் தெளிவாக புலப்படுகின்றது. எம் கண்களில் இருந்து கண்ணீரும் எம்மை அறியாமலே அருவியாய் கொட்டுகின்றது.

அப்படிப்பட்ட வைரமுத்துவுக்கு என்மனதில் ஒரு கவிதை துளிர் விடுகின்றது.

"ஆயிரம் கவி சொன்னேனே.. என் தாய்க்கு ஈடாகுமா..?? இது உன் கவி.
முப்பதாண்டுக்கு மேல் கவி எழுதுகின்றாயே..
3 மணிநேர நிகழ்ச்சியில் உன் புகழை எப்படிச் சொல்வேன்...?? இது என் கவி.
தாயை போற்றும் தலை சிறந்த மகன் நீயடா.. தாய் மண் போற்றும் தலை சிறந்த தமிழ் மகன் நீயடா...!!

உன் தாய்க்கும் குழப்பம்... நீ வைரமா..?? இல்லை முத்தா..?? என்று..
இறுதியில் வைத்துவிட்டால் வைரமுத்து என்று...
உன் கவி வரிகளைக்கேட்டு எனக்கும் ஒரு குழப்பம் தான்.. அது வைரமா..?? இல்லை முத்தா..?? என்று..
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன் அது இரண்டரக்கலந்தவை என்று.....!!"

வைரமுத்துவின் பிறந்தநாளன்று காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது தான் உணர்ந்தேன்.. எதை தெரிவு செய்து ஒலிபரப்புவதென்று தெரியாமல். அப்படிப்பட்ட ஒரு கவிஞனின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 3 மணித்தியாலங்கள் என்ன 30 மணித்தியாலங்கள் கூட போதாது.
அதுவும் நான் பணி புரியும் வானொலி இசை கலைஞர்களின் சுகந்திரமான இசை படைப்புக்களை மட்டும் ஒலிபரப்பும் வானொலி. ஆகவே சினிமா பாடல்கள் இல்லாமலும், சினிமாவைப் பற்றி பேசாது தனியே கவிப்பேரரசின் சாதனைகளையும், அவரது கவித்தொகுப்புக்களையும் மாத்திரமே ஒலிபரப்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டியிருந்தது. இவை எல்லாவற்றையும் தாண்டி நிகழ்ச்சியை சிறப்புறப் படைத்திருந்தேன்.


இப்படிப்பட்ட வைரமுத்து தன் பிறந்த தினத்தன்று, தன்னை ஈன்றெடுத்த தாயைப் போற்றி பேசிய சிறப்புப் பேட்டி சூரியன்FM இல் அஷ்ரப் in "கள்ள மனத்தின் கோடியில்" பகுதியில் ஒலித்தது. அந்த சிறப்புப் பேட்டியினை உங்களுக்காக இங்கு இணைத்துள்ளேன்.


அத்துடன் என்மனதைக் கவர்ந்த வைரமுத்துவின் கவிதைகளில் ஒன்று "இது போதும் எனக்கு..." அந்த கவிதை பாடலாக கேட்கும் போது மேலும் புத்துயிர் பெறச் செய்கின்றது. ஸ்ரீநிவாசின் அழகான குரலில் அப்பாடலை காலை வேளையில் கேட்கும் பொழுது எங்கிருந்தோ ஒரு புது உற்சாகம் பிறக்கின்றது.

கவிப்பேரரசின் குரலில் அக்கவிதை....



அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்டு கதவு தட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும் உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ
இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை
இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்
இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ
இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ
இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்
இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்
நீ பாடும் கீதம்
இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு
உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்
இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு
?


ஸ்ரீநிவாஸ் இன் குரலில் உருவாக்கப்பட்ட அப்பாடலை இணைக்க முடியாமல் போனதுக்கு மனம் வருந்துகின்றேன்.

உண்மையில் என்னைப் பொருத்தமட்டில் கவிப்பேரரசு வைரமுத்து, இவ்வுலகிலே தாயை போற்றுகின்ற மிகச் சிறந்த ஒரு தலை மகனாகவும், தமிழ் மகனாகவும் நான் காண்கின்றேன். காரணம் இந்தளவுக்கு யாரும் தன் தாயை போற்றியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை..!

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமை ...எனக்கு பிடித்தவரைப்பற்றி...
வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்...நண்பரே.. என் கவிதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்....

Unknown சொன்னது…

//Reverie சொன்னது…
அருமை ...எனக்கு பிடித்தவரைப்பற்றி...
வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்...நண்பரே.. என் கவிதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்....//

மிக்க நன்றி தோழரே.. உங்களின் அன்பான வாழ்த்துக்கும் வருகைக்கும்...!!!

உங்கள் கவிதைகளை படித்துவிட்டு கருத்துரை இடுகின்றேன்...!

இலங்கேஸ் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா, அருமை.............

அம்பாளடியாள் சொன்னது…

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எம் கவிப்பேரரசுக்கு...
அத்தோடு நீங்கள் பகிர்ந்துகொண்ட இந்தப் பகிர்வுக்கும்
பாராட்டுக்களும் நன்றியும் சகோ.

Unknown சொன்னது…

//இலங்கேஸ் சொன்னது…
வாழ்த்துக்கள் நண்பா, அருமை.............//

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா...

Unknown சொன்னது…

//அம்பாளடியாள் சொன்னது…
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எம் கவிப்பேரரசுக்கு...
அத்தோடு நீங்கள் பகிர்ந்துகொண்ட இந்தப் பகிர்வுக்கும்
பாராட்டுக்களும் நன்றியும் சகோ.//

மிக்க நன்றி தோழரே... உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும்.......!!!!

Ashwin-WIN சொன்னது…

இது போதும் எனக்கு -ஒலிவடிவம்.கேட்டு பாருங்க. இது வித்தியாசம் http://ashwin-win.blogspot.com/2011/11/blog-post_15.html.

கருத்துரையிடுக